அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக காலை 9.30 மணியளவில் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் லக்னோ வந்த பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி சென்றார்.
அயோத்தி வந்ததும் பிரதமர் மோடி, அங்குள்ள ஹனுமன் கோவிலில் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமரை வழிபட்ட பிரதமர் மோடி, பூஜைகளையும் செய்தார். பின்னர், கோவில் வளாகத்தில் பாரிஜாத மலர்ச்செடியை நட்டு வைத்தார்.
இதையடுத்து, பூமி பூஜை நடைபெறும் இடத்திற்கு மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க பூமி பூஜை தொடங்கியது. இதில், மாஸ்க் அணிந்த படி பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையடுத்து, ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மூன்றரை ஆண்டுகளில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.