மலையகம் முழுதும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக தொழிற்சங்க ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நாம் பல உரிமை சார் விடயங்களை மக்களுக்கு தொடர்ந்து பெற்றுக்கொடுத்து எமது சமுதாயத்தையும் நாட்டையும் பல படுத்தும் செயற்பாட்டில் நாம் செயல்பட்டு வருகிறோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் வெளி விவகாரங்களுக்கு பொறுப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
கண்டி மாவட்டத்தில் கல்வி அபிவிருத்தி வீடமைப்பு தொழிற்சங்க பிணக்குகளைத் தீர்த்தல் தொழில் பேட்டைகளை உருவாக்குதல் தொழில்நுட்ப பயிற்சி நிலையங்களை உருவாக்குதல் தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் ரீதியான அங்கீகாரத்தை வழங்குதல் சுகாதாரம் பாதுகாப்பு என பல கோணங்களில் பல அபிவிருத்தித் திட்டங்களை நாம் இந்த குறுகிய காலத்தில் மேற்கொண்டு வருகிறோம். கண்டி வாழ் மக்கள் மாண்புமிகு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் எம்முடன் கைகோர்த்து உள்ளனர்.
இந்நிலையில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மக்கள் பெருந்தோட்டயாக்கம் மற்றும் அரச பெருந்தோட்டயாக்கம் உரித்தான காணிகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பதாகவும் இதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் துணை நிற்பதாகும் ஒரு போலியான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அரச காணிகளை எவராலும் விற்க முடியாது என்ற அடிப்படை அறிவு இல்லாத அவருக்கு கடந்த நல்லாட்சி காலத்தில் கண்டி மாவட்டத்தில் பல நிலப்பகுதிகள் அப்போதைய பெருந்தோட்ட அமைச்சராக இருந்தவரின் கைக்கூலியாக இவர் செயற்பட்டு பல ஏக்கர் கணக்கான நிலங்களை அவர்கள் அபகரிக்க இவர் துணை நின்றார் என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை விசேடமாக ஹந்தானை தெல்தோட்டை கேளாபோக்க போன்ற பகுதிகளில் எம் மக்களுக்கு காணிகள் வழங்கப்படாது இவ்வாறான அரசியல்வாதிகளின் அடிவருடி களுக்கு காணிகள் வழங்கப்பட்டன.
கண்டி மாவட்ட மக்கள் இவர் போன்ற போலியான அரசியல்வாதிகளை ஏற்கனவே நிராகரித்து விட்டனர் இதன் விளைவாகவே ஒரு இளம் அரசியல் தலைமுறையினரை அங்கீகரித்து பலப்படுத்தி வருகின்றனர். தொழிற்சங்க ரீதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு என்றும் இல்லாத வண்ணம் இம்முறை மக்கள் பேராதரவை வழங்கியுள்ளனர் இந்த காழ்புணர்ச்சி காரணமாக இவ்வாறான எந்த விதமான உறுதிப்பட தகவல்களும் இல்லாத ஏதோ பேச வேண்டும் என்பதற்காக சில விடயங்களை எங்கோ கேட்டறிந்து பாராளுமன்ற உறுப்பினர் உளறுகிறார்.
எனவே அவர் தெரிவித்த கருத்துக்களை உடனே வாபஸ் பெற வேண்டும் என்பதோடு பகிரங்கமாக எங்கள் அமைச்சரிடமும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களளிடமும் மன்னிப்பு கோரவேண்டும். அவ்வாறு தவறும்பட்சத்தில் அவர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கும் பாரதூரமான விளைவுகளை சந்திப்பதற்கும் நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறான போலி அரசியல் செய்வதை விடுத்து வாக்களித்த மக்களுக்கு உங்களால் ஆன சேவைகளை செய்ய முடியாவிடினும் இவ்வாறான வங்குரோத்து அரசியல் செய்வதிலிருந்து தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என பாரத் அருள்சாமி தெரிவித்தார்.










