வேலை செய்வது குற்றமா? 5000 ரூபாவை தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கவும்!

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்வதால் அவர்களுக்கு 5000 ரூபா வழங்க முடியாது எனக் கூறுவது மனிதாபிமானம் அற்ற செயலாகும். வேலை செய்வது ஒரு குற்றமா? என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 5000  ரூபா கொடுப்பனவை மனிதாபிமான அடிப்படையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை விடுத்து அதற்கு பல சட்டங்களை வைத்துக் கொண்டு அதனை கொடுக்காமல் இருப்பதற்கு முயற்சி செய்யுமாக இருந்தால் இது பெருந்தோட்ட தொழிலார்களுக்கு ஏனையவர்களுக்கும் இழைக்கப்படுகின்ற அநீதியாகும்.

பெருந்தோட்டங்கள் தவிர்ந்த கிராமங்களில் இருக்கின்றவர்களுக்கும் நகரங்களில் இருக்கின்ற வருமானம் குறைந்த பலருக்கும் 5000 ரூபா கொடுப்பனவு கிடைக்கவில்லை என்ற முறைப்பாடு தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருக்கின்றது. ஒரு சில கிராம உத்தியோகஸ்தர்களும் பிரதேச செயலாளர்களும் மனிதாபிமானம் அற்ற வகையில் நடந்து கொள்கின்றார்கள்.

பசியும் வறுமையும் அனைவருக்கும் பொதுவானது. இந்த கடுமையான கால கட்டத்தில் அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகள் அனைத்தும் மனிதாபிமானத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டும்.பல வர்த்தகர்களே செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கும் மாத்திரமே வழங்க முடியும் என கிராம சேவகர்களும் பிரதேச செயலாளர்களும் தெரிவிக்கின்றார்கள்.குடும்ப தலைவனுக்கே வழங்க முடியும் என்று கூறுகின்றார்கள்.ஒரு விலாசத்தில் ஒருவருக்கு மாத்திரமே வழங்க முடியும் என்று கூறுகின்றார்கள்.இது முற்றிலும் தவறான நடைமுறையாகும்.

ஏனெனில் இன்றைய நிலையில் பெருந்தோட்டங்களிலும் கிராமப்புறங்களிலும் நகரை அண்டிய பகுதிகளிலும் ஒரு வீட்டில் பல குடும்பங்கள் அதாவது இரண்டிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றார்கள்.இதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.வறுமையில் இருக்கின்றவர்களுக்கு தனித்தனி வீடுகளில் வசிப்பதற்கான சாத்தியம் இல்லை.எனவே இதனை புரிந்து கொண்டு அரச அதிகாரிகள் செயற்பட வேண்டும்.

இன்று பெருந்தோட்ட தொழிலார்கள் வேலை செய்வதை ஒரு குற்றமாகவே இந்த அரசாங்கம் பார்க்கின்றது. அதனால் அவர்களுக்கு 5000 ரூபா வழங்க முடியாது என்று கூறுவது பிழையான விடயமாகும்.பெருந்தோட்ட தொழிலார்களுக்கும் குறைவான வேலை நாட்களே வழங்கப்படுகின்றது.

எனவே அவர்களுடைய வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது.இன்று இலங்கைக்கு அந்நிய செலவாணியை பெற்றுக் கொடுப்பதில் பெரும் பங்கை பெருந்தோட்ட தொழிலாளர்களே வகிக்கின்றார்கள்.எனவே அவர்களுடைய நிலைமையை கருத்தில் கொண்டு இந்த கொடுப்பனவை மனிதாபிமான அடிப்படையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles