ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருவன்புர பகுதியில் நேற்று மாலை இனந்தெரியாத விசமிகளால் பாதுகாப்பு வனப்பகுதிக்கு வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர் எரிந்து நாசமாகின. இதனால் இலங்கைக்கே உரித்தான அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், மூலிகை செடிகள் உட்பட அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.
வறட்சியான காலங்களில் தொடர்ச்சியாக காடுகளுக்கு தீ வைக்கப்படுவதனால் காட்டு விலங்குகள் குடிநீர் தேடி மக்கள் வாழும் பிரதேசங்களை நோக்கி வரக்கூடிய அபாயமும் காணப்படுகின்றன. இதனால் உயிரினங்களுக்கும் பொது மக்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகக்கூடிய வாய்ப்பும் காணப்படுகின்றது.
அதேவேளை குறித்த பாதுகாப்பு வனப்பிரதேசங்களுக்கு அண்மித்த இடங்களிலிருந்தே குடிநீர் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. காடுகளுக்கு தீ வைக்கப்படுவதால் பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் காணப்படுகின்றன.
இந்நிலையில் மத்திய மலைநாட்டில் வறட்சியான காலநிலையினை தொடர்ந்து பாதுகாப்பு வனப்பகுதிகளுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன எனவே இது குறித்து பாதுகாப்பு பிரிவினர் காடுகளுக்கு தீ வைக்கும் விசமிகளை கைது செய்து உரிய தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மலைவாஞ்ஞன்