ஹட்டன் கல்வி வலயத்தின் தமிழ் பாடத்திற்கான உதவி கல்வி பணிப்பாளர் அன்னமுத்து ஜெகன்தாசன் காலமானார்!

ஹட்டன் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் அன்னமுத்து ஜெகன்தாசன் இன்றைய தினம் (06.12.2023) இயற்கை எய்தினார். நீண்ட காலமாக சிறுநீரக கோளாறு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் கண்டி பொது வைத்தியசாலையில் இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.

பொகவந்தலாவ சென்.மேரிஸ் கல்லூரியில் உயர்தரம் வரை கற்ற இவர், பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் இரண்டாம் தொகுதி ஆசிரிய பயிலுனராக 1995 பயின்ற இவர், கட்டுறு பயிலுனராக ஹைலண்ட்ஸ் மத்திய கல்லூரியில் பணியற்றிய காலத்தில் அதிகளவான மாணவர்களை புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடையச் செய்துள்ளார்.

1999 ஆம் ஆண்டு மஸ்கெலியா பிரதேச பாடசாலையில் முதலாவது ஆசிரியர் நியமனத்தை பெற்றார்.

1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கெர்கஸ்வோல்ட் இல 02 பாடசாலையில் இணைந்த இவர் 2008 ஆம் ஆண்டு வரை பாடசாலையில் தமிழ், சமயம், நாடகமும் அரங்கியலும், அபிவிருத்தி கல்வி என கற்பித்து சிறந்த பெறுபேற்களை பெற்றுக்கொடுத்ததோடு மட்டுமல்லாது இணைப்படவிதான செயற்பாடுகளிலும் மாணவர்களை முழுமையாக நெறிப்படுத்தினார்.

2008 ஆம் ஆண்டு ஹோலிறோசரி மகா வித்தியாலயத்தில் உயர்தர கலை பிரிவிற்கான ஆசிரியராக பொறுப்பேற்றார்.

2017இல் இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) பரீட்சையில் சித்தியடைந்து தமிழ் மொழி பாடத்திற்கான உதவிக் கல்வி பணிப்பாளராக நியமனம் பெற்றார்.

இவர் இளங்கலைமாணி பட்டத்தினையும் பட்ட பின் கல்வி டிப்ளோமா சிறப்பு தேர்ச்சியினையும் (PGDE- merit) பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கல்வித்துறையாளராக மட்டுமல்லாது நாடகத் துறை சார்ந்தும், சமூக செயர்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தவர். நாடகத்துறை ஆசிரியராகவும், கலைஞராகவும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பினை வழங்கிய இவர் தியாகராஜா சிவனேசன் தயாரித்த “எலிப்பொறியில் பூனை” எனும் நாடகத்திற்காக தேசிய விருதினை பெற்றுள்ளார்.

இவர் 1971.06.01 ம் திகதி அன்னமுத்து தம்பதியினருக்கு பொகவந்தலாவை தோட்டத்தில் பிறந்தவர். இவருடைய மாணவர்கள் இன்று பல்துறைகளிலும் உயர்நிலையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles