ஹட்டன் நகரை உடன் முடக்கவும் – அழகமுத்து நந்தகுமார் அவசர வேண்டுகோள்

ஹட்டன் நகரம் மற்றும் அண்டியுள்ள பிரதேசங்களில் அண்மைக் காலமாக கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்து வருகின்றது. எனவே, உடனடியாக ஹட்டன் நகரத்தை முடக்கி சன நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு நகர வர்த்தகர்கள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என ஹட்டன் – டிக்கோயா நகர சபை உறுப்பினரும், முன்னாள் நகர பிதாவுமான டாக்டர் அழகமுத்து நந்தகுமார் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

நாட்டில் கொரோனா மற்றும் டெல்டா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மலையகமும் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள், மரணித்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து காணப்படுகின்றது. அந்த வகையில் அட்டன் நகரம் மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் கொரோனா பரவலும், மரணங்களும் தினசரி அதிகரித்த வண்ணம் உள்ளது.

நாட்டின் நிலைமையைக் கருத்திற் கொண்டு இரத்தினபுரி, பலாங்கொடை, பதுளை, பண்டாரவளை, கேகாலை முதலான நகரங்களை இரண்டு வார காலத்துக்கு மூடுவதற்கு அங்குள்ள வர்த்தக சங்கங்கள் தாமாகவே முடிவெடுத்து, மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

அதேபோல், மலையகத்தின் முக்கிய கேந்திர நிலையமாகக் காணப்படும் அட்டன் நகரத்தில் உள்ள வர்த்தகப் பெருமக்கள் உடனடியாக கடைகளை மூடுவதற்கு முன்வர வேண்டியது அவசியமாகும். நகரம் முடங்கும் போது பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்து விடும். அதன் ஊடாக ஓரளவு கொரோனா பரவலை கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும். இந்த விடயத்தில் மக்களின் பாதுக்காப்பை உறுதிப் படுத்தும் வகையில் வர்த்தகர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

மேலும், பொது மக்கள் தமது தேவைக்கு மாத்திரம் நகரங்களுக்கு வருகை தர வேண்டும். அனாவசிய பயணங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்தோடு, நகரத்தில் நூற்றுக் கணக்கான முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

அவற்றில் பயணிக்கும் மக்களின் நலன் கருதி அடிக்கடி தொற்று நீக்கி கிருமி நாசினியை தெளித்துக் கொள்வதிலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் முகக் கவசம் அணியாமலும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமலும் வெளியில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்வதன் மூலம் அட்டன் நகரத்தையும், இங்குள்ள மக்களையும் காப்பாற்ற முடியும் என்பதை உணர்ந்து பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles