ஹிட்லர் ஆட்சியின்போது, தமது அரசியல் எதிரிகளை ஒரே இரவில் இல்லாதொழிப்பதற்கு ஹிட்லர் நடவடிக்கை எடுத்தார். அதேபோன்றதொரு முயற்சிதான் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான அறிக்கை ஊடாகவும் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைமீதான சபைஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஹிட்லர் ஆட்சியின்போது படைப்பிரிவொன்று இருந்தது. அப்படைப்பிரிவு ஊடாக தமது அரசியல் எதிரிகளை ஒரே இரவில் ஒழித்துக்கட்டுவதற்கு ஹிட்லர் நடவடிக்கை எடுத்தார். அதேபோன்றதொரு முயற்சிதான் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான அறிக்கை ஊடாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமது அரசியல் எதிரிகளை ஒழிப்பதற்கும், அரசியல் ரீதியில் படுகொலை செய்வதற்கும் அரசியல் பழிவாங்கல் தொடர்பான அறிக்கை ஊடாக சூழ்ச்சி செய்யப்பட்டுள்ளது என்பது மிகத்தெளிவு. ஹிட்லர் அன்று ஒரு இரவில் செய்ததை, இந்த அரசு அறிக்கை ஊடாக செய்வதற்கு முற்பட்டுள்ளது.
இது அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டக்குழு அல்ல. எனவே, அரசியல் எதிரிகளை ஒழித்துக்கட்டுவதற்கான குழு என்ற பெயரே அதற்கு பொருத்தமானதாக இருக்கும். குடியுரிமையை பறிப்பதன் ஊடாக அனுர குமார திஸாநாயக்க போன்றவர்களின் அரசியல் பயணத்தை தடுக்கமுடியாது. எனினும், அவ்வாறானதொரு முயற்சி எடுக்கப்படுகின்றமையானது ஜனநாயகத்துக்கு விழும் மரண அடியாகும்.
சம்பந்தன் என்பவரும் சிறந்த அரசியல் தலைவர். அவரின் குடியுரிமையை பறித்து வடக்குக்கு வழங்கவுள்ள செய்திதான் என்ன? ஜனநாயக வழிமுறை சரியில்லை, மீண்டும் ஆயுதம் ஏந்துங்கள் என்பதையா இதன் ஊடாக அரசு கூறமுற்படுகின்றது?
சுமந்திரன் என்பவர் பிளவுபடாத இலங்கைக்குள் அரசியல் செய்யும் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார். ஒருமித்த இலங்கையை நம்பும் சுமந்திரனின் குடியுரிமையை பறித்து, மீண்டுமொரு பிரபாகரன் உருவாக வேண்டும் என்ற செய்தியையா அரசு வழங்க முற்படுகின்றது. ரவூப் ஹக்கீமும் முஸ்லிம் மக்களின் தலைவர். ஜனநாயகத்தை விரும்பும் நடுநிலை அரசியல் வாதி. எனவே, அவரின் குடியுரிமையை பறித்து சஹ்ரான்களை உருவாக்குவதற்கு அரசு முற்படுகின்றதா?
ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை பல தடவைகள் வகித்துள்ளார். அவரின் குடியுரிமையை பறிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. சரத் பொன்சேகாவின் குடியுரிமை ஏற்கனவே பறிக்கப்பட்ட நிலையில் மீண்டுமொருமுறை அம்முயற்சி எடுக்கப்படவுள்ளது. சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர ஆகியோரும் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். ” – என்றார்.