ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பொதிகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸ் குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மவுண்ட் பகுதியில் வசிக்கும் 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் 440 ஐஸ் போதைப்பொருள் பொதிகளும் 1020 ஹெரோயின் போதைப் பொருள் பொதிகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை பண்டாரவளை ஹப்புத்தலை வெலிமடை எல்ல ஏனைய பகுதிகளுக்கு விநியோகிப்பதற்கு குறித்த போதைப்பொருள் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தனது சகோதரிக்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்கும் போர்வையில் போதைப்பொருளை பார்சல் செய்து வரைபடத்தின் உதவியுடன் விநியோகித்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் குறித்த பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள் போன்ற இடங்களில் குழிகள் தோண்டி போதைப்பொருள் பொதிகளை புதைத்து வைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழிகள் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஊவா மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் உபுல் சந்தன, பண்டாரவளை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் கலுபான, பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச்.கலேனசிறி மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் பெர்னாண்டோ ஆகியோரின் பணிப்புரையின் பேரில் பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விசாரணையின் பின்னர் சந்தேக நபரை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றதாதில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜ்