பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என மக்கள் போராட்ட முன்னணி சூளுரைத்துள்ளது.
குறித்த சட்டமூலங்களை எதிர்த்து, அவற்றைத் தோற்கடிக்க வேண்டும் என்ற தொனியில் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே இதனைத் தெரிவித்தார்.
திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தில் உள்ள சரத்துகள் ஜனநாயகத்துக்கு முரணானவை எனக் குறிப்பிட்ட அவர், இச்சட்டம் வீதிகளில் மக்களைக் கொல்லக்கூடிய ஒரு யுகத்தை உருவாக்கக்கூடும் என்றும் எச்சரித்தார்.
இவ்வாறான சட்டமூலங்களை அரசாங்கம் கொண்டுவந்தாலும் தாம் அஞ்சப்போவதில்லை எனத் தெரிவித்த வசந்த முதலிகே, அவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளாமல் முழுமையாக மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டி இச்சட்டமூலங்களைத் தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.










