” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித நிபந்தனைகளுமின்றி அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (18) நடைபெற்ற வரவு – செலவுத்திட்டம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் அவசியம் என்ற கோரிக்கை 5 வருடங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்டது.தற்போதுகூட ஆயிரம் என்ற எண்ணிக்கையியே இருக்கின்றனர்.
எனினும், ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்ற பிரதமரின் முன்மொழிவை வரவேற்கின்றோம். ஆனால் எவ்வித தொழில் நிபந்தனைகளும் இன்றி அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைக்கவேண்டும். அவ்வாறு கிடைக்கப்பெற்றால் முழு ஆதரவையும் வழங்குவோம். ஆயிரம் ரூபா கையில் கிடைக்கும்வரை அது தொடர்பில் நம்பிக்கை கொள்ளமுடியாது.
ஆயிரம் ரூபா என்ற முன்மொழிவைத்தவிர பாதீட்டில் மலையக மக்களுக்கென எதுவும் இல்லை.” என்றும் இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.