அரசாங்கம் அறிவித்தல் விடுக்கும்பட்சத்தில் முன்னாள் ஜனாதிபதிக்குரிய அரசாங்க வதிவிடத்திலிருந்து வெளியேறுவதற்கு மஹிந்த ராஜபக்ச தயாராகவே இருக்கின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச தற்போது வசிக்கும் அரச வதிவிடம் தொடர்பில் ஜனாதிபதி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பில் நேற்று பதிலளிக்கையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘ மஹிந்த ராஜபக்ச வசிக்கும் வீட்டை எவருக்கேனும் விற்க வேண்டிய தேவை இருப்பின் அது பற்றி எழுத்துமூலம் அறிவித்தால் வெளியேறுவதற்கு நாம் தயார்.அது நாம் கேட்டு பெற்ற வீடு அல்ல. அரசமைப்பின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு கிடைக்க வேண்டியதொன்றாகும்.
ஜனாதிபதி அல்லது பிரதமர் ஓய்வுபெற்ற பின்னர் பாதுகாப்பான இடத்தில் வதிவிடம் வழங்கப்படுவது வழமையான விடயமாகும். ஜனாதிபதியின் உரையை பார்த்திருந்தால், இது பழிவாங்கலா அல்லது இல்லையா என்பது தெரியவரும்.
அரசாங்கம் அறிவித்தால் எந்நேரமும் வீட்டை விட்டு வெளியேறத் தயார். மஹிந்த ராஜபக்சவும் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளார்.” – என்றார்.