‘அரவிந்தகுமாரின் முடிவுக்கும் மலையக மக்கள் முன்னணிக்கும் தொடர்பு இல்லை’

20ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் வாக்களித்த  அ.அரவிந்தகுமாரின் தீர்மானமானது அவருடைய தனிப்பட்ட தீர்மானமாகும். அது மலையக மக்கள் முன்னணியின் தீர்மானம் இல்லை என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் எஸ்.விஜயசந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (22.10.2020) அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

20 வது திருத்த சட்டம் தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி அவர்களுடைய தீர்மானத்தின்படி எங்களுடைய மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் செயற்படுவார்கள் என நாங்கள் தீர்மானித்திருந்தோம்.

அந்த அடிப்படையில் கொழும்பில் நடைபெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் கலந்துரையாடலின்பொழுது 20 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.அதன் அடிப்படையில் பாராளுமன்றத்தில் எதிர்த்து வாக்களிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அ.அரவிந்தகுமார் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.

அவர் குறித்த சட்டமூலத்திற்கு தான் ஆதரவாக வாக்களிப்பது தொடர்பாக கட்சி உயர்பீடத்துடனோ அல்லது கட்சியின் தலைமைத்துவத்துடனோ எந்தவிதமான கலந்துரையாலையும் அவர் மேற்கொள்ளவில்லை.எனவே இது அவருடைய தனிப்பட்ட தீர்மானமாகும்.கட்சியின் தீர்மானம் அல்ல.

மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு எதிர்வரும் 26.10.2020 திங்கட்கிழமை அன்று ஹட்டன் தலைமையகத்தில் கூடி அனைவருடைய கருத்தையும் அறிந்து கொண்டு இது தொடர்பாக எதிர்கால நடவடிக்கைகளை கட்சி மேற்கொள்ளும்.எனவே ஒரு சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் பிழையானது என்பதையும் இதன்போது சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.” –  எனவும் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் எஸ்.விஜயசந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles