நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் வைத்து, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றத்திற்குரிய பலாத்காரத்தை பிரயோகித்தமை மற்றும் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் ஜனவரி 20ஆம் திகதி இரவு அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கு குற்றத்திற்குரிய பலாத்காரத்தை பிரயோகித்துள்ளதுடன் கடமைகளுக்கும் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இதனையடுத்து அனுராதபுரம் பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்திலும் அறிக்கையிடப்பட்டது.
இதற்கமைய சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா விசேட பொலிஸ் குழுவினால் யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
