அலி ஸாஹிர் மௌலானா 17 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான அலி ஸாஹிர் மௌலானா எதிர்வரும் 17 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக உறுதியேற்கவுள்ளார்.

அமைச்சர் நசீர் அஹமட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வறிதானதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலி சாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

கட்சியின் தீர்மானத்தினை மீறி 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டார்.

இந்த நீக்கலுக்கு எதிராக அமைச்சர் நசீர் அஹமட் உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கிலேயே மேற்படி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

கடந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது சொந்த சின்னமான மரத்திலேயே போட்டியிட்டது. ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியது.

நசீர் அஹமட் நாடாளுமன்றம் வந்தார். அவர் எம்.பி. பதவியை இழந்துள்ளதால், விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள அலிசார் மௌலானா எம்.பியாக பதவியேற்கவுள்ளார்.

Related Articles

Latest Articles