ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: வெளியானது அறிவிப்பு
ஆபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையின் பகுதி 2 அல்லது பகுதி 3 ஆகியவை பாகிஸ்தானின் நடத்தையைப் பொறுத்து அமையும் என்றும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் இந்தியா சகிப்புத்தன்மை காட்டாது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தார்.
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று இந்தியர்களிடம் உரையாடிய ராஜ்நாத் சிங், “ஆபரேஷன் சிந்தூரின் பகுதி 2 அல்லது பகுதி 3 நடவடிக்கைகள் தேவையா என்பது குறித்து நாங்கள் சொல்ல முடியாது. அது பாகிஸ்தானின் நடத்தையைப் பொறுத்தது. அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்களுக்கு தகுந்த பதிலடி கிடைக்கும்.
ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு அடுத்த நாள் முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்புச் செயலாளருடன் ஆலோசனை நடத்தினோம். அப்போது, அரசாங்கம் ஒப்புதல் அளித்தால் அவர்கள் நடவடிக்கைக்குத் தயாரா என்பதுதான் எனது முதல் கேள்வி. அவர்கள் ஒரு நொடி கூட தாமதிக்காமல், முற்றிலும் தயாராக இருப்பதாக பதிலளித்தனர். பின்னர் நாங்கள் பிரதமர் மோடியை அணுகினோம், அவர் எங்களுக்கு ஆதரவு அளித்தார், எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்கள்.” – என்று குறிப்பிட்டார்.
பிரதமரும்கூட ஆபரேஷன் சிந்தூர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவே கூறியுள்ளார். எனவே தேவையெனில் அதை மீண்டும் தொடங்கலாம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியப் படைகள் எல்லையைத் தாண்டி பல பயங்கரவாத முகாம்களை அழித்த பிறகு, பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியபோது, “நாங்கள் நல்ல உறவுகளை விரும்புகிறோம், ஏனெனில் மறைந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ‘நண்பர்களை மாற்ற முடியும், ஆனால் அண்டை நாடுகளை மாற்ற முடியாது’ என்று கூறினார்.
அதன் அடிப்படையில் போர் நிறுத்ததுக்கு ஒப்புக்கொண்டோம். நாங்கள் அவர்களை சரியான பாதைக்குக் கொண்டுவர முயற்சிக்கிறோம்” எனவும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவுக்கு இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும்.










