ஆறுகளை இடைமறித்து இயந்திரங்களால் மணல் அகழும் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்குமாறு கோரி பலாங்கொடை வேலிஓய சந்தியில் நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
வேலிஓயா மற்றும் கால்கன் ஓயா போன்ற ஆறுகள் இப்பகுதி மக்களின் விவசாயத்திற்கு தேவையான நீரை வழங்கி வரும் இயற்கை வளம் மிக்க ஆறுகளாகும். இந்த ஆறுகள் இரண்டும் சங்கமிக்கும் இடத்தில் காணப்படும் பாரிய அணைக்கட்டு வழியாக இப்பிரதேச சுய தொழில் செய்யும் பலர் அனுமதிப்பத்திரம் பெற்று மணல் அகழ்ந்து வருகின்றனர்.
அத்துடன் இதன்மூலம் மணல் போக்குவரத்து மணல் அகழும் கூலியாட்கள், தரகர்கள் எனப்பலரும் இந்த அணைக்கட்டில் சேரும் மணலினால் நன்மை பெற்று வந்தனர். எனினும் இந்த அணைக்கட்டினை தனியார் நிறுவனம் மணல் அகழ்வுக்காக மத்திய சுகாதார அதிகார சபைக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளமையினால் மணல் அகழ்வை சுயதொழிலாக கொண்டிருந்த கிராம மக்கள் வருமான ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இந்த அணைக்கட்டை குத்தகைக்கு பெற்றுள்ள நிறுவனம் அனுமதிப்பத்திரத்தையும் பெற்று இவ்விடத்தில் இயந்திரம் மூலம் பாரிய அளவில் மணல் அகழ்வு இடம் பெறுவதனால் இயற்கை அழகு மிகுந்த ஆற்றங்கரைகள் கரைந்து வருவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் நீரைக் குடி நீராகவும் ஏனைய பல்வேறு தேவைகளுக்காகவும் வருவோர் சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருதாகவும் பொது மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலைமைகளைக் கருத்திற் கொண்டு மேற்படி தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள குத்தகையை இரத்து செய்து பல வருடங்களுக்கு முன்னர் காணப்பட்டது போன்று இந்த அணைக்கட்டின் மூலம் மணலினைக் கீழ்ப்பகுதியில் உள்ள மக்களுக்குக் கிடைக்கச் செய்யுமாறும் இங்கு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
