இணைந்து செயற்படுவதற்கு அழைப்பு விடுப்பதை கைவிட்டு, தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி.
இணைந்து செயற்படுவதற்கு முன்வர வேண்டும் என ஜனாதிபதி உட்பட ஆளுங்கட்சியினர் எதிரணிக்கு விடுக்கும் அழைப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் மேற்கண்டவாறு கூறினார்.
” இலங்கை விழவில்லை. ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் வீழ்த்தப்பட்டது. கோட்டாபய ராஜபக்ச தவறான முடிவுகளை எடுத்ததால் நெருக்கடிகள் உச்சம் தொட்டன. எனவே, கோட்டாவை ஆட்சிக்கு கொண்டுவர பாடுபட்ட அரசியல் பிரமுகர்கள் இதற்கு பொறுப்பு கூறவேண்டும்.
அந்த குழுவுக்குதான் ஜனாதிபதி ரணில் தற்போது தலைமை வழங்குகின்றார், அவர்களுடன் எப்படி இணைந்து செயற்பட முடியும், அந்த தரப்புக்கு மக்கள் ஆணை இல்லை. எனவே, தேர்தலொன்று நடத்தப்பட்டு, மக்கள் ஆணையுடன் புதிய ஆட்சி அமைய வேண்டும். தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது, எனவே, அழைப்பு விடுப்பதைவிடுத்து, அதனை செய்யுமாறு கோருகின்றோம்.” – என்றார்.
