“ இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் கைச்சாத்திடப்படவுள்ள எட்கா உடன்படிக்கைக்கு முழு எதிர்ப்பை வெளியிடுகின்றோம்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
“நாடு இன்று ஓரளவு ஸ்தீரமான நிலையில் உள்ளது. இதற்காக தற்போதைய ஜனாதிபதிக்கு நன்றிகளை கூறிக்கொள்கின்றேன். நாடு முன்னேற வேண்டுமெனில் முதலில் நாட்டு மக்கள் சட்டத்தை மதிக்க வேண்டும். காட்டு சட்டம் நாட்டை ஆள முடியாது. பொருளாதார சவாலை எதிர்கொள்ள ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை மதிக்கின்றோம். ஆனால் மெல்லென இந்திய மயமாக்களுக்கு உள்ளானால் அதற்கு நாம் முழு எதிர்ப்பு.
இந்திய ரூபா எமது நாட்டில் பயன்பாட்டுக்கு வந்தால் அதற்கு நாம் எதிர்ப்பு. இலங்கை இந்தியாவின் 29 ஆவது மாநிலமாவதற்கும் நாம் எதிர்ப்பு. விமான நிலையங்களின் அதிகாரம் இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதற்கும் நாம் எதிர்ப்பு. கேந்திர முக்கியத்துவமிக்க இடங்கள் வெளிநாட்டவர் கைகளுக்கு செல்வது நாட்டின் இறைமையுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். எட்கா உடன்படிக்கையை கைச்சாத்திட முற்பட்டால் அதனையும் நாம் எதிர்ப்போம். எட்கா, சீபா உடன்படிக்கைகளுக்கு எமது நாட்டு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்தியர்கள் எமது நாட்டுக்கு வந்து தொழில் செய்வதற்கு அனுமதி வழங்கும் இந்த உடன்படிக்கை எமது நாட்டுக்கு தாக்கம் ஏற்படுத்தக்கூடியது.
இந்தியாவில் 44 மில்லியன் பேருக்கு வேலையில்லை. அதேபோல தொழில் இல்லாமல் 2 லட்சம் வைத்தியர்கள் உள்ளனர். இந்தியாவில் வருடாந்தம் 15 லட்சம் பொறியியலாளர்கள் உருவாகின்றனர். எமது நாட்டில் 2 ஆயிரம் பேர்வரைதான் பொறியிலாளர்களாக உருவாகின்றனர். எனவே, தொழில் சந்தையை இந்தியா ஆக்கிரமிக்கலாம். இதனால் எமது இளைஞர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.” – என்றார்.
