இந்திய பாதுகாப்பு அமைச்சர் – சஜித் கொழும்பில் சந்திப்பு

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (09) சந்தித்து பேச்சு நடத்தினார்.

கொழும்பில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும் பன்முகத் தொடர்புகள் போலவே இரு தரப்பினரின் பரஸ்பர நலனுக்காக இருதரப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வரலாற்று ரீதியான, கலாச்சார மற்றும் மக்கள் இடையேயான தொடர்புகளைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நெருக்கமான, பயனுள்ள மற்றும் தொடர்ச்சியான உறவைப் பேணுவதன் முக்கியத்துவத்தை இந்தியப் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

அத்துடன், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலவ வேண்டிய அமைதி, பாதுகாப்பு, நிலையான தன்மை மற்றும் மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு உள்ளிட்ட பிராந்திய அபிவிருத்தி மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாகவும் இரு தலைவர்களும் பல கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

பரஸ்பர மரியாதை, இறையாண்மை, சமத்துவம், நம்பிக்கை மற்றும் புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வலுவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கக்கூடிய உறவைப் பேணிப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது மீண்டும் வலியுறுத்தினார்.

Related Articles

Latest Articles