இந்திய வான்வெளியில் பறக்க பாகிஸ்தான் விமானங்களுக்குத் தடை!

 

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க மத்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசு தரப்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் தரப்பில் இந்திய விமானங்கள் அந்த நாட்டின் வான்வெளியில் பறக்க அண்மையில் தடை பிறப்பிக்கப்பட்டது. அதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் மே 24-ம் திகதி இந்திய நேரப்படி காலை 5.29 வரையில் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

“பாகிஸ்தான் நாட்டு விமானங்கள், அந்த நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் இயக்கும் விமானங்கள், இராணுவ விமானங்கள் என எந்தவிதமான வானூர்தியும் இந்திய வான் எல்லையை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நிதி நெருக்கடியால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கை பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு மேலும் நெருக்கடியை தரும் எனவும், பயண நேரத்தை அதிகரிக்க செய்யும் எனவும் கூறப்படுகிறது.

குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து தென்கிழக்கு ஆசியாவுக்கு செல்லும் விமானங்கள் இந்திய வான்வெளியை தவிர்க்க வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

Related Articles

Latest Articles