இரத்தினபுரியில் தோட்டத் தொழிலாளியின் குடும்பம்மீது தாக்குதல்!

இரத்தினபுரி, கிரியெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலதுர தோட்டத்தில் தொழில் புரியும் தோட்டத் தொழிலாளி தொழிலுக்கு வராததால் அவரின் குடும்பம்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று இ.தொ.காவின் உப தலைவரும், இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான ரூபன் பெருமாள் தெரிவித்தார்.

தோட்டத்தில் காவலாளியாக கடமையாற்றும் பெரும்பான்மையினத்தவர் ஒருவர், தொலைபேசி மூலமாக மிரட்டல் விடுத்துள்ளதுடன், தோட்ட குடியிருப்பு அமைந்துள்ள கோட்டப்பந்தா பகுதிக்கு ஆயுதங்கள் சகிதம் மேலும் சில பெரும்பான்மையினத்தவர்களுடன் சென்று, தொழிலாளியின் குடும்பத்தினரை தாக்கியது மட்டுமல்லாது, அந்த இடத்திலிருந்து அவரை இழுத்துச் சென்று தோட்டக் குடியிருப்புக்கு அப்பாற்பட்ட பிரதேசத்தில் வைத்து மேலும் தாக்கியுள்ளனர் எனவும் ரூபன் பெருமாள் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான வீராசாமி ஜெகதீஸ்வரன் (வயது 44) தற்போது இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் குடும்ப உறுப்பினர்கள்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக தோட்ட இளைஞர்கள் , தொலைபேசி மூலமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமானிடம் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தனக்கு பணிப்புரை விடுத்ததற்கமைய, சம்பவ இடத்திற்கு நேரடியாக விரைந்ததாகவும் ரூபன் பெருமாள் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தியுள்ளேன் எனவும் ரூபன் பெருமாள் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles