” எமது அரசு இராணுவத்தை நம்புகின்றது. எதிர்காலத்திலும் இராணுவத்தின் ஒத்துழைப்பு பெறப்படும். அதேபோல குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முற்படும் எதிரணிக்கு அதற்கான வாய்ப்பை வழங்கமாட்டோம்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாடு இராணுவத்திடம் கையளிக்கப்படுகின்றதென எதிர்க்கட்சித் தலைவர் குற்றஞ்சாட்டினார். எமது அரசு இராணுவத்தை நம்புகின்றது. இதனால்தான் ஜேஆர், பிரமேதாச, ரணில் போன்றவர்களால் முடியாமல்போன, யுத்தத்தை எம்மால் முடிவுக்கு கொண்டுவரமுடிந்தது.
அதேபோல கொரோனா பெருந்தொற்றின்போது தடுப்பூசி திட்டம் வெற்றியளிக்க சுகாதார துறையினருக்கு இராணுவத்தினர் பெரும் பங்களிப்பை வழங்கினர். எதிர்காலத்திலும் தேவைகளின் நிமித்தம் ஒத்துழைப்பை பெறுவோம். இதனால் மக்கள் பிரதிநிதிகளின் கௌரவம் பாதிக்கப்படாது. அபிவிருத்தி நடவடிக்கைக்கு இராணுவத்தை பயன்படுத்துவது தவறு கிடையாது.
அதேவேளை, இந்த அரசு வீட்டுக்கு செல்ல வேண்டும் எனவும், ஆட்சியை முன்னெடுக்க முடியாவிட்டால் தம்மிடம் ஒப்படைக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். அவரால் இந்த அரசை சட்டப்பூர்வமாகவோ அல்லது வேறு வழியிலோ கவிழ்க்க முடியாது.
தற்காலிக அரச எதிர்ப்பு அலையை உருவாக்கலாம். அது நிரந்தரமாக அமையாது.”- என்றார்.










