உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தன்மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முற்றாக நிராகரித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் கடும் சொற்போர் இடம்பெற்றது. அவ்வேளையிலேயே பொன்சேகா கூறுவது பொய் என மைத்திரி குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அப்பட்டமான பொய்களையே இவர் (பொன்சேகா) கூறினார். அவர் இராணுவ தளபதியாக இருந்தபோது ஆயிரம் முதல் ஆயிரத்து 500 வரையில் எமது பையன்கள் ஒரே தடவையில் உயிரிழந்தனர். இது பற்றி அவர் கதைப்பதில்லை.
இராணுவத்தளபதியாக இருந்து, அவரால் இராணுவ தலைமையகத்தைக்கூட பாதுகாக்கமுடியாமல்போனது. அவரை ஒரு வாகனத்திலும், அவரின் வயிற்று பாகங்களை மற்றுமொரு வாகனத்திலுமே கொண்டுசெல்ல நேரிட்டது. இப்படியானவர் தேசிய பாதுகாப்பு பற்றி கதைக்கின்றார். நாடாளுமன்ற தெரிவுக்குழு என்பது அரசியல் நோக்கம் கொண்டதாகவே இருந்தது. அது ஒரு தலைபட்சமாகவே செயற்பட்டது.” – என்றார் மைத்திரி.
