நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 41,000 மெட்ரிக் டன் டீசல் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டு வருவதாக எரிபொருள் தொகை களஞ்சியசாலையின் தலைவர் நாலக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒக்டேன் 92 ரக மற்றும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் விநியோகமும் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளொன்றில் 5,000 மெட்ரிக் டன் டீசலும், 4,000 மெட்ரிக் டன் பெற்றோலும் நாட்டிற்கு அவசியமாகும்.
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, டீசல் இன்மை காரணமாக நேற்றைய தினம் 20 சதவீத தனியார் பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுன விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின் தங்களுக்கு சலுகை அடிப்படையில் எரிபொருளை வழங்க அரசாங்கம் பொறிமுறையொன்றை தயாரிக்க வேண்டும்.
இதற்கு மேலும் பேருந்து கட்டணங்களை உயர்த்தி பொதுமக்களை அசௌகரியத்திற்குள்ளாக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.










