” தொழில் உரிமைகளுக்காகவும், இருப்பிடத்திற்காகவும் தொடர்ந்து போராடிவரும் இறம்பொடை ஆர். பி தோட்டத்திற்கு விசேட அதிரடிப்படையினரை அனுப்பியது மற்றும் மலையக நாடகக் கலைஞரான இராசையா லோகாநந்தனின் “லயத்து கோழிகள்” என்ற நாடகத்தை பொகவந்தலாவையில் அரங்கேற்றுவதற்கு தடைகளை ஏற்படுத்த இராணுவம் முயற்சித்தமை வேண்டுமென்றே குழப்பத்தை விளைவிக்கின்ற மற்றும் ஜனநாயக விரோத செயலாகவே கருத வேண்டி உள்ளது.
தோட்ட நிர்வாகங்களின் அடக்குமுறைகளை எதிர்த்து தொழிலாளர்கள், சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள் குரல் எழுப்பும் போது அவர்களை பொலிஸ் நிலையங்களுக்கு வரவழைத்து அச்சுறுத்துவது மலையகத்தில் பரவலாக நடந்து வருகின்றது.”
இவ்வாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மலையக பிராந்திய செயலாளர் டேவிட் சுரேன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
இராணுவ, பொலிஸ் புலனாய்வாளர்கள் மலையகத்தில் சமூக, அரசியல், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் மலையகத்தின் மக்கள் சார்பு ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தல்களை பிரயோகிப்பது தொடர்பில் எமது கட்சி கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மலையக தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக இருந்தும் காணி உரிமை மறுக்கப்பட்டவர்களாகவும் வளப்பகிர்விலே பாரபட்சத்திற்குள்ளாகி இருந்து வருவது உலகம் அறிந்ததே,
இவ்வாறான நிலைமையில் உரிமைகள், தேவைகளுக்காக கோரிக்கைகள் எழுவதும், போராட்டங்கள், கவனயீர்ப்புகள் மற்றும் எழுச்சிகள் ஏற்படுவது இயல்பானதே, அதனை அரசாங்கம் சிங்கள பெளத்த பேரினவாத கண்ணோட்டத்திலேயே அணுகும் என்பது உறுதியானது .
மலையகம் தொடர்பில் அவதூறான பிரசாரங்கள் அடிப்படைவாதிகளாலும் பேரினவாதிகளாலும் முன்னெடுக்கப்படக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் இந்த கேடுகெட்ட பின்தங்கிய சமூக முறையில் இது இயல்பானதே ஆனாலும் எதிர்த்து நின்று முறியடிக்கப்பட வேண்டியதே.
கடந்த காலங்களில் இடம்பெற்று வந்த மலையக தியாகிகளின் நினைவுக்கூறல்கள், இனத்துவ அடையாளம் சார்ந்த பண்பாட்டு, கலாசார நிகழ்வுகள், போராட்டங்கள் என சகல செயற்பாடுகளையும் ஆரம்பத்திலேயே ஒடுக்குவதற்கும் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதற்கும் புலனாய்வாளர்கள் முயன்று வருகின்றார்கள். ஆளும் வர்க்கத்தை பாதுகாக்கும் இராணுவ, பொலிஸ் அச்சுறுத்தல்களுக்கும் பயமுறுத்தல்களுக்கும் சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை அதனை எதிர்க்க முன் வரவேண்டும் அதற்கு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி எப்போதும் துணை நிற்பதோடு மக்களோடு இணைந்து போராடி சவால்களை முறியடிப்போம் எனவும் டேவிட் சுரேன் தெரிவித்துள்ளார்.