இலங்கையில் விசேட புத்தகக் கண்காட்சியை நடத்த ஏற்பாடு!

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள அரிய மற்றும் வரலாற்று மதிப்புமிக்க புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளடங்கிய விசேட புத்தகக் கண்காட்சியொன்றை இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்த ஏற்பாடு செய்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி இன்று (22) முற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்று வரும் 23 ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிடுவதற்காக சென்றிருந்தார்.

இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படவுள்ள புத்தகக் கண்காட்சிக்கு இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் ஒத்துழைப்பை பெற எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று காலை கண்காட்சி வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி , இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இலங்கை மன்றக் கல்லூயின் தலைவர் சமன் அதாவுதஹெட்டி, புத்தக வெளியீட்டாளர்கள் சங்க உறுப்பினர்களான விஜித யாப்பா, எச்.டி. பிரேமசிறி, ஆரியதாச வீரமன், அதுல ஜெயக்கொடி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த வருட புத்தகக் கண்காட்சியில் 400 இற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புத்தக வெளியீட்டாளர்களின் விற்பனைக் கூடங்கள் இடம்பெற்றுள்ளன. ஜனாதிபதி அவர்கள் அவற்றை நேரில் சென்று பார்வையிட்டதுடன் புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுடனும் சிறிது நேரம் உரையாடினார்.

கண்காட்சி வளாகத்திற்கு வருகை தந்திருந்த பொது மக்களுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.

Related Articles

Latest Articles