‘இலங்கையில் தமிழ் மொழிக்கு இம்முறையும் சுதந்திரம் மறுப்பு’

உலகில் 19 ஆம் நூற்றாண்டிலேயே தேசிய கீதத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டு – அது தொடர்பான கருத்தாடலும் மேலோங்கியது.

ஆரம்பத்தில் ஐரோப்பியாவிலும் – அதன்பிறகு ஏனைய நாடுகளிலும் தேசிய கீதம் இயற்றப்பட்டு, தேசிய நிகழ்வுகளின்போது இசைக்கப்படும் நடைமுறை அமுலுக்கு வந்தது என வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு முன்னர், இலங்கையில் நடைபெறும் அரச நிகழ்வுகளில் ‘God Save the Queen’ என தொடங்கும் பிரிட்டனின்; தேசிய கீதமே பாடப்பட்டுவந்தது.

1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரே –இலங்கையின் அடையாளத்தை பிரதிபலிக்கும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

பிரபல பாடலாசிரியரும், இசையமைப்பாளருமான ஆனந்த சமரகோனால் 1940 இல் எழுதப்பட்ட ‘நமோ, நமோ மாதா’ என்ற பாடலை தேசிய கீதமாக ஏற்பதற்கு முன்மொழியப்பட்டது.

இறுதியில் “நமோ, நமோ”என்பது மாற்றப்பட்டு “சிறிலங்கா தாயே”என்ற பதத்துடன் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பான யோசனை 1951 ஆம் ஆண்டு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் ஒப்புதலும் பெறப்பட்டது.1951 நவம்பர் 22 ஆம் திகதி சட்டப்பூர்வமான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

1949ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 2ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளதுஎன அரச ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1978 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இலங்கையின் அரசியலமைப்பில் “ இலங்கைகுடியரசின் தேசிய கீதம்“சிறிலங்கா மாதா” என்பதாக இருத்தல் வேண்டும் என சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மொழியிலான அரசியலமைப்பில் “இலங்கை குடியரசின் தேசிய கீதம் சிறிலங்காதாயே” என்பதால் இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொழி மற்றும் அர்த்தப்படுத்தல்கள் தொடர்பில் சர்ச்சை எழுகின்றபோது சிங்களத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயமே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதே சம்பிரதாயமாக கடைபிடிக்கப்பட்டுவருகின்றது.

இதனை தூக்கிப்பிடித்துதான் – மொழி உரிமையை மறந்து கடும்போக்குடைய சிங்கள தேசிய வாத அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழிழ் தேசிய கீதம் இசைக்கப்படுவது அரசியலமைப்பை மீறும் செயல் என சுட்டிக்காட்டிவருகின்றனர்.

எனினும் மொழி உரிமை 16 ஆவது திருத்தத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளதுஎன்பதும் அவர்களுக்கு தெரியாது. மொழி உரிமைகள் தொடர்பான அத்தியாயத்தை அவர்கள் வாசித்தது கிடையாது.

இந்தத் திருத்தத்துக்கு முன்னதாக 1978ஆம் ஆண்டில் இரண்டாம் குடியரசு யாப்பு உருவாக்கப்பட்டபோது,அது சிங்களத்திலும் தமிழிலும் உருவாக்கப்பட்டது என்பதும் தெரியாது.

“இரு மொழிகளிலும் அரசமைப்பு உருவாக்கப்பட்டபோது அதில் எது மேலோங்கும் என்பதும் கிடையாது. இரண்டுக்கும் சம அந்தஸ்து இருக்கின்றது” – என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மொழிக்கு தடை

2015 இல் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் ஆட்சி உதயமானதும், 2016 பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில், நிகழ்வின் இறுதியில் தமிழ் மொழியில் தேசியகீதம் இசைக்கப்பட்டது.அதன்பின்னர் வருடாந்தம் அந்த நடைமுறை பின்பற்றப்பட்டுவந்தது.

2019 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்ற பின்னர், அவர் தலைமையில் புதிய அரசாங்கம் பதவியேற்றது.

இந்நிலையிலேயே தேசிய கீதம் இசைக்கப்படும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு,சிங்கள மொழிக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கும் வகையில் தீர்மானம் எடுக்கப்பட்டது. 2020 இல் பாடப்படவில்லை. இம்முறை 73 ஆவது சுதந்திர தினத்திலும் பாடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசியகீதத்தை தமிழ்ப் புலவர் மு.நல்லதம்பியே தமிழிழ் மொழிபெயர்த்தார். தமிழ் பாடல் வரிகளின் பொருளானது, சிங்கள பாடல் வரிகளின் அதே பொருளைக் கொண்டுள்ளது.

எனவே, 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் இரண்டு தேசிய கீதங்கள், வெவ்வேறான அர்த்தங்களில் இசைக்கப்படுவதாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துகள் அறியாமையின் வெளிப்பாடாகவே இருக்கின்றன.

தேசிய கீதம் என்பது உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும்.அதை இசைக்கும்போது தாய்நாடு மீதான பற்றால் நெஞ்சம் நிமிர்ந்து நிற்கும். அத்துடன்,தேசியகீதம் இசைக்கப்படும்போது அதன் அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும்.

பொருள் தெரியாமல், அர்த்தம் புரியாமல் ஒரு பாடலை இசைப்பதால் எந்த வகையில் தேசம்மீதான பற்று உருவாகும்? அது கூடஅடக்குமுறை –புறக்கணிப்பின் ஓரங்கமாகவே பார்க்கப்படும். இலங்கையில் இம்முறை அதுவே நடந்துள்ளது.

இலங்கையில் தமிழ்ப் பாடசாலைகள், வடக்கு, கிழக்கு பகுதிகளில் நடைபெறும் தேசிய நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழ் மொழியிலேயே பாடப்பட்டுவந்தாலும்-பிரதான நிகழ்வில் தமிழுக்கு இருந்த அங்கீகாரம் நீக்கப்பட்டுள்ளமையானது தமிழர்களை சினம்கொள்ள வைத்துள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பு 20 தடவைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்16ஆவது திருத்தத்தின் ஊடாக இலங்கையில் தமிழ் மொழியும் அரச கருமமொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே, தமிழை மென்மேலும் புறக்கணிக்க எத்தனிப்பதானது 56 யுகத்தையே மீண்டும் உருவாக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையின் அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் என நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாடுகளில் பங்கேற்கும்போது அங்கு இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியிலேயே இசைக்கப்படுகின்றது.இதற்கு தமிழ் மக்கள் ஒருபோதும் எதிர்ப்பை வெளியிடவில்லை.

எனினும், அற்ப அரசியலுக்காகவும், தமிழர்களை பழிவாங்குவதற்காகவும், அடுத்த பொதுத்தேர்தலில் சிங்கள, பௌத்த வாக்குகளை முழுமையாக வேட்டையாடுவதற்கும் தேசிய கீதத்தையே அரசியல் மயப்படுத்தி தவறான முன்னுதாரணத்தை கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் வழங்கியுள்ளது என சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஆளுங்கட்சியில் உள்ள தமிழ் அரசியல் பிரமுகர்கள் என்ன செய்யபோகின்றார்கள், குறைந்தபட்ச எதிர்ப்பையாவது வெளியிடுவார்களா?

எஸ்.பிரதா
வட்டகொடை

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles