ஈரானுடனான போருக்கு மத்தியில் அமெரிக்க ராணுவ செயலாளர் ராஜினாமா!

அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்சேத்துடனான பல மாத கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, அமெரிக்க ராணுவச் செயலர் டான் டிரிஸ்கோல் தனது ராஜினாமா கடிதத்தை வெள்ளை மாளிகைக்கு அனுப்பியுள்ளார் என தெரியவருகின்றது.

துணை ஜனாதிபதி ஜே.டி.வேன்ஸுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் டிரிஸ்கோல், ஹெக்சேத்தின் தலைமையின் கீழ் பென்டகனில் இருந்து நீக்கப்பட்ட அல்லது பதவியை இழந்த முன்னணி அதிகாரிகளின் வரிசையில் தற்போது இணைந்துள்ளார்.

மத்திய கிழக்கில் ஆயிரக்கணக்கான அமெரிக்க ராணுவ வீரர்கள் போரில் ஈடுபட்டுள்ள சூழலில், ஈரான் உடனான போர் தீவிரமடைந்துள்ள வேளையில் இந்த விலகல் நிகழ்ந்துள்ளது.

எனினும், டிரிஸ்கோலின் ராஜினாமாவை வெள்ளை மாளிகை ஏற்றுக்கொண்டதா என்பது குறித்து உடனடியாகத் தெளிவுபடுத்தப்படவில்லை.
“ராணுவத்தை நவீனமயமாக்கும் முயற்சிகள் மற்றும் தயார்நிலை குறித்த தனது கவலைகளை டிரிஸ்கோல் நிர்வாகத்திடம் முன்வைத்தார்.

குறிப்பாக, இந்த மாற்றங்களுக்குப் பொறுப்பான ஜெனரல்களை ஹெக்சேத் பணிநீக்கம் செய்து, தனது முயற்சிகளுக்குத் தடை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்” என்று சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் வெளியான இந்தச் செய்தி குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்க ராணுவம் மறுத்துவிட்டது.

அதேவேளையில், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாற்றுச் சிறப்புமிக்க ராணுவ நடவடிக்கைகளின் போது மிகச்சிறந்த தலைமையை வழங்கியது, ராணுவத்தின் தயார்நிலை மற்றும் ஆற்றலை மீட்டெடுத்தது, ரஷ்யா – உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு உதவியது என அமெரிக்க ராணுவத் துறையில் அதிபர் டிரம்பின் திட்டங்களை டான் டிரிஸ்கோல் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles