உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைன் இராணுவம் ஒரே இரவில் ரஷ்ய இலக்குகள் மீது சுமார் 1,200 ட்ரோன்களை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து உக்ரைன் நடத்திய மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்தத் தாக்குதல்களில் ரஷ்யாவின் மூன்று பிராந்தியங்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒரு சிறுவனும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 17 பேர் காயமடைந்துள்ளனர்.
இதற்குப் பதிலடியாக ரஷ்யாவும் உக்ரைன் மீது 117 ட்ரோன்களை ஏவியுள்ளது. சபோரிஷியா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர். குடியிருப்புக் கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.
இதற்கிடையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் சமாதான முயற்சிகள் புதிய கட்டத்தை எட்டியுள்ளன.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் ரஷ்ய மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுடன் இரண்டு நாட்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அமெரிக்காவின் விசேட தூதர்களான ஸ்டீவ் விட்கொஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை மொஸ்கோவில் சந்தித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, அயர்லாந்தின் டப்ளினில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களைச் சந்தித்த உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியுடனும் அமெரிக்கத் தூதர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
எதிர்வரும் பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய நாடுகளையும் இணைத்துக்கொள்ள ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது.
எனினும், உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்ட பின்னரே பாதுகாப்பு தொடர்பான விரிவான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைப் பொறுப்பாளர் காஜா கல்லாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பாவின் எதிர்காலத்தை அமெரிக்காவோ ரஷ்யாவோ தனித்து தீர்மானிக்க அனுமதிக்க முடியாது என லக்சம்பேர்க் பிரதமர் லுக் பிரைடன் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், நேட்டோ அமைப்பையும் பனிப்போருக்குப் பின்னரான ஐரோப்பிய பாதுகாப்புக் கட்டமைப்பையும் சிதைப்பதே ரஷ்யாவின் நோக்கம் என போர் ஆய்வுக்கான நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதனால், சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டாலும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் பல்வேறு சவால்கள் நீடிக்கின்றன.










