நுவரெலியா மாவட்டம், அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட உருலேக்கர் தோட்டப் பகுதியில் அமைந்துள்ள பாலத்தை உடனடியாகப் புனரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2025ஆம் ஆண்டு ஏற்பட்ட டித்வா புயலின்போது ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் குறித்த பாலம் சேதமடைந்துள்ளது. தற்போது, மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படும் இப்பாலம் இதுவரை சீரமைக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், மழைக்காலங்களில் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் நோயாளர்கள் ஆற்றைக் கடந்து செல்ல முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, அவசர மருத்துவத் தேவைகளுக்காக பிரதான வைத்தியசாலைக்குச் செல்வதிலும், மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதிலும் பெரும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு உயிராபத்துகள் நேரிடுவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு பாலத்தைப் புனரமைத்துத் தர வேண்டும் என உருலேக்கர் தோட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்










