தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட முன்மொழிவு எதிர்வரும் 12 ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் முன்வைக்கப்படவுள்ளது.
வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14 ஆம் திகதி நடைபெறும்.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீடுக்காக ஒக்டோபர் 07ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
நிதி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி 2026 நவம்பர் 12ஆம் திகதி வியாழக்கிழமை ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டை (வரவுசெலவுத் திட்ட உரை) முன்வைப்பார்.
அதனைத் தொடர்ந்து நவம்பர் 13ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதி வரை 07 நாட்களுக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுது. நவம்பர் 20ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு குழுநிலை விவாதத்தை நடத்துவதற்கும், டிசம்பர் 14ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர, சனிக்கிழமைகள் உட்பட அனைத்து நாட்களிலும் வரவுசெலவுத் திட்ட விவாதம் நடைபெறும். அத்துடன், இந்த அனைத்து நாட்களிலும் நாடாளுமன்றம் முற்பகல் 9.30 மணிக்கு கூடவுள்ளது.
மேலும், இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதக் காலப்பகுதியில் அரசாங்கத் தரப்புக்கு 60 சதவீதமும் எதிர்க்கட்சிக்கு 40 சதவீதமும் என்ற அடிப்படையிலும், குழுநிலை விவாதக் காலப்பகுதியில் அரசாங்கத் தரப்புக்கு 40 சதவீதமும் எதிர்க்கட்சிக்கு 60 சதவீதமும் என்ற அடிப்படையிலும் நேரத்தை ஒதுக்குவதற்கு இங்கு இணக்கம் காணப்பட்டது.
………..
தீவிரமடையும் முரசுப் புயல்

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள முரசு புயல், மேலும் வலுவடைந்து தீவிர புயலாக வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை செல்வதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
முரசு புயல் காங்கேசன்துறையிலிருந்து சுமார் 480 கிலோமீற்றர் தூரத்தில் தற்போது நிலைகொண்டுள்ளது.
இது இன்று (02) நள்ளிரவுக்கும் நாளை (03) அதிகாலைக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஆந்திரப் பிரதேசம் ஊடாக இந்தியாவிற்குள் ஊடறுக்கும் என திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் இன்று (02) பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் இடைக்கிடையே மழைப் பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
………….
முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து முச்சக்கரவண்டிகளுக்கான பயணக் கட்டணத்தை உயர்த்துவதற்கு தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழிலாளர் சங்கம் முன்மொழிந்துள்ளது.
இதன்படி, முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 110 ரூபாவிலிருந்து 120 ரூபாவாகவும், அடுத்தடுத்த ஒவ்வொரு கிலோமீற்றருக்குமான கட்டணத்தை 90 ரூபாவிலிருந்து 100 ரூபாவாகவும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா, முன்னதாகவும் எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து கட்டணத் திருத்தம் கோரியிருந்த போதிலும், அதற்குப் பதில் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை 25 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதால், தாம் மேலும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமையைப் பயணிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கட்டண உயர்வு முன்மொழிவை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் (NTC) சமர்ப்பித்து, அடுத்த சில நாட்களில் அதன் பதிலுக்காகக் காத்திருக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதிகாரிகள் சாதகமான பதிலை வழங்கத் தவறினால், கட்டண மீற்றர்களைச் சீரமைக்கும் பொறுப்புடைய நிறுவனங்களுடன் கலந்துரையாடி, கட்டணங்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
…………..
டீசல் விலை உயர்வு; பாடசாலை போக்குவரத்துக் கட்டணத்தில் மாற்றமில்லை

டீசல் விலை அண்மையில் அதிகரித்துள்ள போதிலும், பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துக் கட்டணங்களை உயர்த்தப்போவதில்லை என அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சங்கம் பெற்றோருக்கு உறுதியளித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் மால்ஸ்ரீ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பினால் பாடசாலை போக்குவரத்துச் சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதில் சாரதிகள் மற்றும் சேவை வழங்குநர்கள் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், தற்போதைய நிலையில் அதிகரித்த எரிபொருள் செலவுச் சுமையைப் பெற்றோர் மீது சுமத்தப்போவதில்லை என அவர் வலியுறுத்தினார்.
பாடசாலை போக்குவரத்துச் சேவை வழங்குநர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியைக் குறைக்கும் வகையில், டீசல் விலையை அரசாங்கம் ஓரளவுக்கேனும் குறைக்க நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
டீசல் விலை குறைக்கப்பட்டால், அதன் பலன் பாடசாலைப் போக்குவரத்துக் கட்டணக் குறைப்பின் ஊடாகப் பெற்றோருக்கும் கிடைக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
………..
பஸ் கட்டணம் உயராது
எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிடுகையில், எரிபொருள் விலை உயர்வு காரணமாக பேருந்து கட்டணத் திருத்தத்தை மேற்கொள்வதற்குரிய விலை சூத்திரத்தின்படி, விலை அதிகரிப்பு 4 சதவீதம் என்ற எல்லையை எட்டவில்லை என்பதால், கட்டணங்களை உயர்த்த முடியாது எனத் தெரிவித்தார்.
எனினும், தற்போது பேருந்து தொழிலை நஷ்டத்திலேயே நடத்திச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், குறுகிய தூர சேவைகளில் நாளொன்றுக்கு 1,000 ரூபாவும், நெடுந்தூர சேவைகளில் நாளொன்றுக்கு 2,000 ரூபாவும் நஷ்டம் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
……….
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் சட்டத்தரணியுமான லால் விஜேநாயக்கவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியபோது…

………….
2 ஏக்கரில் கஞ்சா- 36,710 செடிகள் அழிப்பு: மூவர் கைது

மொனராகலை, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவ்ஆர பகுதியில் சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த 36,710 கஞ்சா செடிகள் சுற்றிவளைப்பின்போது அழிக்கப்பட்டுள்ளதுடன், மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தின் தகவலின்படி, இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து, மொனராகலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, ஆறு முதல் எட்டு அடி உயரம் வரை வளர்ந்திருந்த கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட 36,710 கஞ்சா செடிகளும் வேருடன் பிடுங்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே தீயிட்டு அழிக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பேகமுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
………..
வயல் வேலையின் போது நீரில் தவறி வீழ்ந்து விவசாயி மரணம்
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வயலில் விவசாய வேலையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக நீரில் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வழமை போல் தனது வயல் நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்த வேளையிலேயே இந்தச் சோகச் சம்பவம் சம்பவித்துள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
மேற்படி நபர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரெனக் கால் வழுக்கி அருகில் இருந்த நீர் தேங்கிய பகுதியில் தவறி வீழ்ந்துள்ளார். நீண்ட நேரமாக அவர் கரைக்கு வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோதே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் உடனடியாக மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனை மற்றும் மேலதிக மரண விசாரணை நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திடீர் மரணம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
…………
இம்மாத இறுதிக்குள் TIN பதிவுகள் 1.35 கோடியைத் தாண்டும்

நாட்டில் வரி அடையாள இலக்கத்தை (TIN) பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை ஒக்டோபர் மாத இறுதிக்குள் 1.35 கோடியைத் தாண்டுமென உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அன்றாட நிதிப் பரிவர்த்தனைகளில் வரி அடையாள இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அதிகளவானோர் வரி வலையமைப்புக்குள் இணைந்து வருவதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.
கடந்த 18 மாதங்களாக வரி அடையாள இலக்கப் பதிவுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு கோடி பேர் வரி அடையாள இலக்கத்தைப் பெற்றிருந்த நிலையில், 2026ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த எண்ணிக்கை சுமார் 1.2 கோடியாக அதிகரித்தது.
மே மாதத்தில் 1.3 கோடியைக் கடந்திருந்தது. தற்போது 1.35 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நாட்டில் பதிவு செய்ய வேண்டிய வயதுடையவர்களில் சுமார் 30 இலட்சம் பேர் இன்னும் பதிவு செய்யவில்லை என மதிப்பிடப்பட்டுள்ளது.
…………
எல் நினோ தாக்கம்: உணவுப் பற்றாக்குறையைத் தவிர்க்க இலங்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் உணவுப் பொருட்களுக்கு ஏற்படக்கூடிய தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்கான திட்டங்களை இலங்கை முன்னெடுத்து வருவதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றது.
இதன்படி, சீனி பெரும்பாலும் பிரேசிலிலிருந்தும், பருப்பு அவுஸ்திரேலியா மற்றும் கனடாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுவதாக சங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து பெருமளவு பருப்பு இறக்குமதி செய்யப்படுவதுடன், 20 சதவீதமானவை கனடாவிலிருந்து பெறப்படுகின்றன. முழுப் பருப்பாக இறக்குமதி செய்யப்பட்டு, இலங்கையிலுள்ள தொழிற்சாலைகளில் அவை பிரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதால் தட்டுப்பாட்டைத் தவிர்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஏற்றுமதித் தடையைத் தொடர்ந்து, சீனிக்கான முக்கிய விநியோக நாடாக பிரேசில் விளங்குவதாகவும், அடுத்த சில மாதங்களுக்கான இறக்குமதித் திட்டங்களில் தற்போது எவ்வித சிக்கலும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற அழுகக்கூடிய பொருட்கள் வாராந்தம் இறக்குமதி செய்யப்படுவதால், அவற்றை முன்கூட்டியே திட்டமிடுவது சிரமமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது வெங்காயம் இந்தியாவிலிருந்தும், உருளைக்கிழங்கு பாகிஸ்தானிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. எதிர்வரும் ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இல்லை எனவும், நவம்பர் மாத இறுதியில் வர்த்தக அமைச்சுடன் கலந்துரையாடி அடுத்தகட்ட நிலைமையை மதிப்பிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக சரக்குக் கப்பல் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும், இதன் தாக்கத்தால் கொத்தமல்லி உள்ளிட்ட சில பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
………..










