சீன பெண் ஒருவர் 8 அங்குல நீள கண் இமைகளுடன் 5 ஆண்டுகளுக்கு பின் சொந்த சாதனையை முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.
உலகில் அழகாக இருப்பது என்பது எந்த பெண்ணுக்கு பிடிக்காது. எல்லா பெண்களும் தங்களை அழகுப்படுத்தி கொள்ள விரும்புவர். இவற்றில் முக அழகு முக்கிய இடம் பிடிக்கிறது. முகத்தில் கண் இமைகள், நல்ல கருமை நிறத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக மஸ்கரா உள்ளிட்ட வண்ண பூச்சுகளை நவீன கால யுவதிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மிக நீண்ட கண் இமைகளை வளர்த்து சீனாவை சேர்ந்த யூ ஜியாங்சியா என்ற பெண் கின்னஸ் சாதனை படைத்து உள்ளார். அவரது இமைகளின் மொத்த நீளம் 8 அங்குலம் ஆகும். கடந்த 2016ம் ஆண்டில் ஏற்படுத்திய சொந்த சாதனையை அவர் முறியடித்து உள்ளார்.
இதற்காக தொடர்ந்து அவற்றை வளர்த்து வந்துள்ளார். இதுபற்றி கூறும் ஜியாங்சியா, எனக்கு ஏன் இவ்வளவு நீண்ட கண் இமைகள் இருக்கின்றன என நான் யோசித்ததுண்டு. சில ஆண்டுகளுக்கு முன் மலை பகுதியில் 480 நாட்கள் வரை வசித்து வந்தேன் என கூறுகிறார்.
ஊசி போல் அதனை நீட்டி கொள்கிறார். உலகின் மிக நீண்ட கண் இமைகளை கொண்ட பெண் என்ற பெருமையை பெற்று, கின்னஸ் சாதனை படைத்துள்ள அவர் தொடர்ந்து கூறும்பொழுது, இது நிச்சயம் கடவுள் புத்தர் அளித்த பரிசாகவே இருக்கும்.
இதனால் எனது அன்றாட வாழ்க்கையில் எந்த சங்கடமும், பாதிப்பும் ஏற்படவில்லை. அதற்கு பதிலாக, எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியே ஏற்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட வீடியோ வெளிவந்து வைரலாகி உள்ளது.