உலக அழகிப் பட்டம் வென்றார் தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா

 

ஹைதராபாத்தில் நடைபெற்ற உலகி அழகி இறுதிப் போட்டியில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ 72-வது மிஸ் வேர்ல்டாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.8.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் உலக அழகி 2025-ம் ஆண்டுக்கான போட்டி நடைபெற்றது. இதில் 120 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.

மே 10-ம் திகதி தொடங்கிய இதன் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மார்டினிக், எத்தியோப்பியா மற்றும் போலந்து நாடுகளைச் சேர்ந்த அழகிகளை பின்னுக்குத் தள்ளி தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ வெற்றிபெற்றார்.

அவருக்கு கடந்த ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா கிரீடத்தை அணிவித்தார்.

எத்தியோப்பியாவை சேர்ந்த போட்டியாளரான ஹாசெட் டெரெஜே அட்மாசு முதல் ரன்னராக அறிவிக்கப்பட்டார். போலந்து நாட்டின் மஜா கிளாஜ்தா இரண்டாவது ரன்னர் ஆகவும் மார்டினிக்கின் ஆரேலி ஜோகிம் மூன்றாவது ரன்னர் ஆகவும் அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் இந்தி நடிகர் சோனு சூட்டுக்கு அவரது மனிதநேய பணிகளை கவுரவிக்கும் விதமாக மிஸ் வேர்ல்ட் மனிதாபிமான விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்தின் புக்கட் தீவைச் சேர்ந்த ஓபல் சுச்சாட்டா கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் தாய்லாந்து போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவர். மேலும் மிஸ் யுனிவர்ஸ் 2024 போட்டியில் மூன்றாவது ரன்னர் ஆக தேர்வானார். தற்போது அவர் தம்மசாட் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளில் இளங்கலைப் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles