“ உள்ளாட்சிசபைத் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. தேர்தலுக்காக புதிதாக வேட்பு மனுக்களை கோருவதா, இல்லையா என்பது பற்றி அடுத்த நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கப்படும்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதன்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ உள்ளாட்சி சபைத் தேர்தல் முறைமையை மாற்றுவது பற்றி இன்னும் கலந்துரையாடல் இடம்பெறவில்லை.
எனினும், உள்ளாட்சிசபைத் தேர்தலுக்காக வேட்பு மனுக்களை கையளித்தவர்களில் சிலர் வெளிநாடு சென்றுள்ளனர். மேலும் சிலர் கட்சி மாறியுள்ளனர். சிலர் உயிரிழந்துவிட்டனர். இப்படியான பிரச்சினைகள் உள்ளன.
எனவே, உள்ளாட்சிசபைத் தேர்தலின்போது ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை அப்படியே அனுமதிப்பதா அல்லது புதிதாக வேட்பு மனுக்களை ஏற்பதா என்பது பற்றி தீர்மானிக்க வேண்டும்.
புதிதாக வேட்பு மனுக்களை ஏற்பதாக இருந்தால் சட்ட திருத்தம் அவசியம். புதிய நாடாளுமன்றத்திலேயே இது பற்றி தீர்மானிக்கப்படும். மாறாக தேர்தல் முறைமை மாற்றம் பற்றி அரசாங்கம் முடிவெதையும் எடுக்கவில்லை.”- என்றார்.