உள்ளாட்சிசபைத் தேர்தல் ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தப்படும் எனவும், அது முடிவடைந்த பின்னரே மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது பற்றி முடிவெடுக்கப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். அதன்பிறகே மாகாணசபைத் தேர்தல் பற்றி கலந்துரையாடப்படும். மாகாணசபைத் தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருந்தாலும் அதனை நடத்துவதற்குரிய சூழ்நிலை கடந்தகாலங்களில் ஏற்படுத்தப்படவில்லை.
எனவே, பழைய முறைமையில் அத்தேர்தலுக்கு செல்வதா அல்லது உள்ளாட்சிசபைபோல் கலப்பு முறைமையா என்பது பற்றி தற்போது கலந்துரையாடப்படவில்லை. உள்ளாட்சிசபைத் தேர்தல் முடிந்த பிறகே அது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்.
உள்ளாட்சிசபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அதனை சபாநாயகர் அறிவித்த பிறகு, சட்டம் நிறைவேற்றப்பட்டு ஏபரல் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்படும். அதற்கு பொருத்தமான நாளை தேர்தல் ஆணைக்குழு தீர்மானிக்கும்.” – என்றார்.
