‘எதிரணி தலைவர்களின் குடியுரிமையை பறிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை’

எவரது குடியுரிமையையும் இரத்து செய்வதற்கோ அல்லது அதற்காக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கமோ அல்லது அமைச்சரவையோ தலையீடுகளை மேற்கொள்ளாது என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும் பெருந்தொட்ட தொழிற்துறை அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் உடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை கவனத்தில் கொண்டு தெரிவு செய்யப்பட்ட சிலரின் குடியுரிமையை இரத்து செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படும் கூற்று குறித்து ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் மேலும் பதிலளிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான விடயங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

700 க்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி கையளிக்கப்பட்டது. இதனை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழி பெயர்ப்பதற்கு 3 வார காலம் சென்றது.

இதன் பின்னரே நேற்றை தினம் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை விரைவில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட இருப்பதாகவும் கூறினார்.

இது தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டமா அதிபர் ஊடா நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதே போன்று இது தொடர்பில் எந்தவித அரசியல் அழுத்தத்தையும் சம கால அரசாங்கம் மேற்கொள்ளாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Paid Ad