‘எதிரணி தலைவர்களை கிலிகொள்ள வைக்கும் ‘ஜனாதிபதி ஆணைக்குழு ஒப்பரேஷ்ன்’!

1970 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மண்கவ்விய ஐக்கிய தேசியக்கட்சி, அதன்பின்னர் 1977 இல் நடைபெற்ற தேர்தலில் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது. ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் பலமானதொரு அரசு அமைக்கப்பட்டதுடன், அதிரடியான முடிவுகளும் எடுக்கப்பட்டன.

குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு சவாலாக அமைந்த சுதந்திரக்கட்சியின் தலைவர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை பறிப்பதற்கு ஜே.ஆர். அரசு நடவடிக்கை எடுத்தது. நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை சட்டவிரோதமாக ஈராண்டுகள்வரை நீடித்தமை உட்பட மேலும் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டடே அரசியல் ரீதியில் ஶ்ரீமா வேட்டையாடப்பட்டார்.

இதற்கு எதிர்ப்புகள் வலுத்தன. போராட்டங்கள் வெடித்தன. ஆனாலும் 10 ஆண்டுகளுக்கு பிறகே அவருக்கு சிவில் உரிமைகள் கிடைக்கப்பெற்றன. இதனால் 1982 இல் நடைபெற்ற இலங்கையின் முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீமாவோ அம்மையாரால் களமிறங்கமுடியாமல்போனது. ஹெக்டர் சுதந்திரக்கட்சியின் சார்பில் ஹெக்டர் கொப்பேகடுவ போட்டியிட்டார்.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் குடியுரிமையை பறித்து சிறையில் அடைப்பதற்கு மஹிந்த ராஜபக்ச அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக இராணுவ நீதிமன்றமும் பயன்படுத்தப்பட்டது. அனைத்துலக மட்டத்திலிருந்து எதிர்ப்புகள் வலுத்ததால் பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, விடுதலைசெய்யவேண்டிய நிலை மஹிந்தவுக்கு ஏற்பட்டது.

தற்போதைய ஆட்சியின்கீழும் குடியுரிமை உட்பட சிவில் உரிமைகளை பறிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் பகீர் தகவலை வெளியிட்டுள்ளன. இதற்கு முன்னைய சந்தர்ப்பங்களில் தனி நபர்கள் இலக்கு வைக்கப்பட்டிருந்தாலும் இம்முறை எதிரணியிலுள்ள முக்கிய அரசியல் பிரமுகர்களின் தலைவகள் குறிவைக்கப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சிகள் பதறுகின்றன.

2019 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்ற பின்னர் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் 2021 ஜனவரி இறுதியில் கையளிக்கப்பட்டிருந்தாலும் அது இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இதற்கிடையில் இக்குழுவில் உள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கல் வேட்டைக்காகவே இவ்வாறான குழு அமைக்கப்பட்டுள்ளது என எதிரணி தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

நல்லாட்சியின்போது உயர்மட்ட குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. இக்குழுவில் எதிரணி உறுப்பினர்களும் இடம்பெற்றிருந்தனர். அந்தவகையில் சம்பந்தன், சம்பிக்க ரணவக்க, அநுரகுமார திஸாநாயக்க, ரவூப் ஹக்கீம் உட்பட மேலும் சில எதிரணி உறுப்பினர்களே தற்போது இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களே தம்மை அரசியல் ரீதியில் பழிவாங்கலுக்கு உட்படுத்தினர் என ராஜபக்ச படையணி கருதுகின்றது. இந்நிலையில், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தவர்களை தண்டிப்பதற்கும், குற்றவாளிகளுக்கு வெள்ளையடிப்பு செய்வதற்குமே கோட்டா அரசு ஆணைக்குழுக்களை அமைத்து, அரசியல் செய்வதாக எதிரணி தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இறுதியில் 7 ஆண்டுகளுக்கு தமது குடியுரிமை உட்பட சிவில் உரிமைகளை அரசாங்கம் பறிக்கக்கூடும் எனவும், அதற்கு தேவையான நடவடிக்கைகள் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஊடாக முன்னெடுக்கப்படும் எனவும் சம்பிக்க ரணவக்க அச்சம் வெளியிட்டுள்ளார். அவ்வாறு நடந்தால் சர்வதேச அழுத்தம் குவியும் எனவும் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசின் இந்த நகர்வுக்கு எதிராக ஜே.வி.பி. தற்போதே போராட்டங்களை நடத்திவருகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியும் அடுத்துவரும் நாட்களில் நடவடிக்கையில் இறங்கக்கூடும். விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஏப்ரல் மாதத்தில் வெளிவரவுள்ளது. அதன்பின்னரே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிரடிக்காட்டக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

எனினும், குடியுரிமையை பறிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை எனவும், விசாரணைகளில் அரசியல் தலையீடுகள் இருக்காது எனவும் அரசாங்க தரப்பு அறிவித்துள்ளது.

Paid Ad