” எதிர்காலத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியை அமைப்பதே எங்களின் எதிர்ப்பார்ப்பு. அதற்கேற்ற வகையில் கட்சி கட்டியெழுப்படும்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கண்டியில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சவால்களுக்கு மத்தியில் பயணித்த கட்சியாகும். மீண்டெழுவதற்கான சக்தி இந்த கட்சிக்கு இருக்கின்றது. 14 பேர் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதற்கு முன்னர் 8 எம்.பிக்கள் அங்கம் வகித்த சந்தர்ப்பமும் உள்ளது. எனவே, எதிர்காலத்தில் சுதந்திரக்கட்சி ஆட்சியை அமைப்பதே எமது எதிர்ப்பார்ப்பு.
அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் அதேவேளை கட்சியை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்படும்.” – என்றார்.
கண்டி தலதாமாளிகைக்கு சென்ற மைத்திரி அங்கு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன்பின்னர் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார்.