எரிபொருள் நிலையங்களிலும் தரப் பரிசோதனை-இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு

நுகர்வோரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்தும் தர ஆய்வுக்காக எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்தில் மட்டும் பெற்றோல் மற்றும் டீசல் தரம் குறைவாக இருப்பதாக, நுகர்வோரிடமிருந்து 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

நாட்டில் எங்களிடம் 1,200 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளன. 100 இடங்களில் இருந்து 100 முறைப்பாடுகளை பெற்றிருப்பின், நாட்டின் 10 சதவீத நிரப்பு நிலையங்களில் தரம் குறைந்த எரிபொருள் உள்ளதென கருதமுடியும் என்றார்.

சில நுகர்வோர் எரிபொருளில் இருந்து துர்நாற்றம் வருவதாக முறைப்பாடு தெரிவித்துள்ளனர். சிலர் லீற்றருக்கு பயணிக்க தூரத்தின் எண்ணிக்கை வழமையை விட குறைந்துள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் சிலர், ஒதுக்கீட்டுக்கு ஏற்ப எரிபொருள் விநியோகிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நுகர்வோர் ஆலோசனைக் குழு, குறித்த முறைப்பாடுகளை விசாரிக்கத் தீர்மானித்துள்ளதுடன், எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து மாதிரிகளை சேகரிக்கும் என்றும் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.

Related Articles

Latest Articles