வவுனியா மாநகர சபை மேயர் பதவியிலிருந்து சு.காண்டீபன் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வடக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்தும் வவுனியாவில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபனின் பதவி பறிக்கப்பட்டதுடன், அவரது மாநகர சபை உறுப்புரிமையும் இரத்துச் செய்யப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வவுனியா – பண்டாரவன்னியன் சதுக்கத்துக்கு முன்பாக ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கிருந்து மன்னார் வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று காமினி மகா வித்தியாலயம் முன்பாக நின்று ஆளுநருக்கு எதிராகக் கடுமையான கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்களின் கைகளில், ”ஆளுநரே ஜனநாயகப் படுகொலையை நிறுத்து”, ”ஜே.வி.பியின் முகவராக ஆளுநரே செயற்படாதே”, ”மக்கள் ஆணைக்கு மதிப்பளி”, ”தையிட்டியில் பாராமுகம், மாநகர சபையில் பழிவாங்கலா?”, ”ஊழல் அறிக்கையை வெளிப்படுத்து” போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், ப.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், எஸ்.வினோநோகராதலிங்கம், முத்து முகமது மற்றும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான செ.மயூரன், க. சிவநேசன், ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோருடன் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், அரசியல் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.
