நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று (28) இரவு முதல் கனமழை பெய்து வருவதுடன், கடும் பனிமூட்டமும் நிலவி வருவதால் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் நுவரெலியா, மஸ்கெலியா உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இச்சீரற்ற காலநிலை தொடர்கிறது.
குறிப்பாக, கினிகத்தேனை முதல் நுவரெலியா வரையிலான பகுதிகளில் பனிமூட்டம் நிலவுகின்றது.
பனிமூட்டம் காரணமாகக் காட்சித்திறன் (Visibility) குறைவடைந்துள்ளதால், வாகனச் சாரதிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை (Headlights/Fog lights) ஒளிரவிட்டவாறு, மிகவும் அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸ் அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், தொடர் மழை காரணமாகப் பல வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுகின்றன. இதனால், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் இதர வாகனங்களில் பயணிப்போர் விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில், மிகுந்த எச்சரிக்கையுடன் தங்களது வாகனங்களைச் செலுத்த வேண்டும் எனவும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
– மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்
