மத்திய மாகாண கல்வி சேவைகள் (சனச) சங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான பணிப்பாளர் குழு தேர்தல் நேற்று (28) ஞாயிற்றுக்கிழமை கண்டி பொல்கொல்ல மத்திய மாகாண கூட்டுறவு சங்க பிரதான மண்டபத்தில் நடைப்பெற்றது.
மத்திய மாகாண கல்வி சேவைகள் (சனச) சங்கத்தின் பணிப்பாளர் குழுவிற்கு 8 உறுப்பினர்களும் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரும் 35 வயதிற்கு கீழ்பட்ட இரண்டு உறுப்பினருமாக மொத்தமாக 11 உறுப்பினர்களை தெரிவு செய்ய தேர்தல் நடைப்பெற்றது.
இத்தேர்தலில் கண்டி, கம்பளை, கட்டுகஸ்தோட்டை, தெல்தெனிய, தெவிநுவர, வத்தேகம, மாத்தளை, நாவுல, வில்கமுவ, நுவரெலியா, அட்டன், கொத்மலை, ஹங்குரங்கெத்த, வலப்பனை ஆகிய கல்வி வலயங்களிலிருந்து 25 இற்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இத்தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற டி.ஜி.என்.பீ. நாலக்க ஜயதிலக சபையின் தலைவராகவும் உப தலைவராக தெஹிஹஸ்தென்னவும் தெரிவு செய்யப்பட்டனர்.
நுவரெலியா மாவட்டத்திலிருந்து அதிக வாக்குகளை பெற்று பழனியாண்டி திருக்கேதீஸ்வரனும் (பி.கேதீஸ்) கண்டி மாவட்டத்திலிருந்து கிருஸ்ணகுமாரும் வெற்றி பெற்று சபைக்கு தெரிவாகினர்.
மேலும் உறுப்பினர்களாக ஹறிஸ்வத்து, அமுணுகம, காமினி பண்டார, சந்துன்ரட்ண ஆகியோரும் ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் பட்டியலில் எம்.ஜி.சமரவீரவும் 35 வயதுக்கு கீழ்பட்ட உறுப்பினர்களில் யு.ஜி.கே.ஜயநந்த, ஹேவாபண்டார ஆகியோரும் தெரிவாகினர்.
மத்திய மாகாண கல்வி சேவைகள் (சனச) சங்கத்தில் 26 ஆயிரத்திற்கு அதிகமான அரச உத்தியோகத்தர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.










