இஸ்ரேலின் கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, வேலை தேடுபவர்களிடம் பணம் வசூலித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், பணியக வளாகத்திற்குள்ளேயே சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக காத்திருந்தவர்களிடம், அரசாங்கத் திட்டத்தின் கீழ் கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் வேலை பெற்றுத் தர முடியும் எனக் கூறி இருவர் பணம் வசூலிப்பதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
அந்தத் தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட விசாரணை அதிகாரிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக வளாகத்தில் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் புத்தலவைச் சேர்ந்த, தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் எனவும், மற்றையவர் பெலியத்தையைச் சேர்ந்தவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கைது செய்யப்பட்டபோது ஏழு கடவுச்சீட்டுகள் மற்றும் இஸ்ரேல் வேலைவாய்ப்பு தொடர்பான பல ஒப்பந்த ஆவணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் வேலை தேடுபவர்களை பலமுறை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்குள் அழைத்து வந்து, தங்களால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தர முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், அவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் போன்று தோற்றமளிக்கும் வகையிலும் நடந்துகொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த இருவரும் ‘சந்தனி மெனிக்கே’ என அடையாளம் காணப்பட்ட பெண் ஒருவரின் வழிநடத்தலின் கீழ் செயற்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த பெண், இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினரால் முன்னதாக கைது செய்யப்பட்டு, பின்னர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று (13) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சேவைகள் அல்லது தகவல்களைப் பெற வருபவர்கள், சம்பந்தப்பட்ட பிரிவுகளின் அதிகாரிகளிடமோ வரவேற்புப் பிரிவு அதிகாரிகளிடமோ மட்டுமே தகவல்களையும் சேவைகளையும் பெறுமாறு பணியகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், பணியகத்தின் நடைபாதைகளிலோ வளாகத்திற்கு வெளியிலோ சுற்றித்திரியும் நபர்களுடன் எந்தவித பணப் பரிவர்த்தனைகளிலும் ஈடுபட வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.










