2026 உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் முதலாவது சுற்றோடு சவூதி அரேபிய தேசிய அணி வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டு கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) தலைவர் Yasser al-Misehal தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.
இத்தொடரில் உருகுவேயுடன் 1-1 என சமநிலை, உலகக் கிண்ணத் தொடருக்கு முதன்முறையாகத் தகுதிபெற்ற கேப் வெர்டே (Cape Verde) அணியுடன் கோல்கள் எதுவுமின்றி சமநிலை மற்றும் பலத்த எதிர்பார்ப்புக்குரிய ஸ்பெயின் அணியிடம் 4-0 என்ற கணக்கில் அடைந்த மோசமான தோல்வி ஆகியவற்றின் காரணமாக, சவூதி அரேபிய அணி இரண்டு புள்ளிகளுடன் எச் (Group H) பிரிவில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது.
“உலகக் கிண்ணத் தொடரின் அடுத்த சுற்றுக்குத் தேசிய அணி தகுதி பெறத் தவறியமையானது, எங்களது எதிர்பார்ப்புகள் அனைத்தையும் சுக்குநூறாக்கிய ஒரு முடிவாகும். இதற்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன்.
எங்களது அணியை இன்னும் சிறந்ததொரு நிலையில் பார்க்க விரும்பிய அனைவருக்கும் எனது மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்” என யாசிர் அல்-மிஷால் (Yasser al-Misehal) எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“பொறுப்புணர்வின் காரணமாக, ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டியுள்ளது. எனவே, எனது தற்போதைய பதவிக் காலம் முடியும் வரை நீடிக்காமல் விலக நான் முடிவெடுத்துள்ளேன்” என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏழு ஆண்டுகளாகக் கால்பந்து சம்மேளனத்தின் தலைவராகப் பதவி வகித்த அல்-மிஷால், 2034 உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பைச் சவூதி அரேபியா வெற்றிகரமாகப் பெறுவதில் முக்கியப் பங்கு வகித்தார்.
எண்ணெயைச் சார்ந்துள்ள தனது பொருளாதாரத்தைப் பன்முகப்படுத்துவதற்கான சவூதியின் மூலோபாயத் திட்டத்தில் இது ஒரு மைல்கல்லாகும்.
சவூதி அரேபியா இந்த ஆண்டு தனது மூன்றாவது தொடர்ச்சியான உலகக் கிண்ணத் தொடரில் விளையாடியது. மூன்று முறை ஆசிய சாம்பியன்களான சவூதி அணி, 1994 ஆம் ஆண்டு சுற்று-16 (Round of 16) இற்குத் தகுதி பெற்றதன் பின்னர் இதுவரை நாக்-அவுட் சுற்றுகளை எட்டவில்லை.
குழு நிலைப் போட்டிகளுடன் வெளியேறிய ஏழு ஆசிய அணிகளில் சவூதி அரேபியாவும் ஒன்றாகும். ஆசிய பிராந்தியத்தில் இருந்து ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மட்டுமே சுற்று-32 (Round of 32) இற்கு முன்னேறியுள்ளன.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நட்புரீதியிலான பயிற்சிப் போட்டிகளில் சவூதி அணி தொடர் தோல்விகளைச் சந்தித்ததால், பிரெஞ்சுப் பயிற்சியாளரான ஹெர்வ் ரெனார்ட் (Herve Renard) தனது பதவியை இழந்திருந்தார்.
இத்தாலியப் பயிற்சியாளர் ரொபர்டோ மான்சினியின் (Roberto Mancini) நீக்கத்திற்குப் பிறகு, ரெனார்ட் இரண்டாவது முறையாகச் சவூதி அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றிருந்த நிலையில் அவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளில் சவூதி அரேபியா கால்பந்து துறையில் சுமார் 2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளதுடன், கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் மற்றும் கரீம் பென்சிமா போன்ற உலகத் தரம் வாய்ந்த வீரர்களை சவூதி புரோ லீக் (Saudi Pro League) தொடருக்குள் ஈர்த்துள்ளது.
இத்தொடர் தற்போது உலகின் அதிக வருவாய் ஈட்டும் கால்பந்து போட்டிகளில் ஒன்றாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
