எல்ல பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து: 15 பேர் பலி

ஊவா மாகாணம், பதுளை மாவட்டம் – எல்ல, வெல்லவாய வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

எல்ல – வெல்லவாய பிரதான வீதியின் 15 ஆவது மைல்கல் அருகில் அமைந்துள்ள மவுண்ட் எவன் சுற்றுலா விடுதிக்கு அருகில் தங்காலை நகரில் இருந்து 38 சுற்றுலா பயணிகளுடன் வருகைத் தந்து மீண்டும் தங்காலை நோக்கி பயணித்த பேருந்து சுமார் 500 அடி பள்ளத்தில் தடம் புரண்டு வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இக்கோர விபத்து நேற்று இரவு(04) 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் பேருந்தில் பயணித்த 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 8 பெண்களும் சிறுவர் ஒருவர் உட்பட 7அடங்குகின்றனர்.

விபத்தில் காயமடைந்த 5 சிறுவர்கள் உட்பட 17 பேர் பண்டாரவளை, தியத்தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் பதுளை மாவட்ட போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

விபத்தின் போது பள்ளத்தாக்கின் புதர்களில் தூக்கியெறிப்பட்டவர்களை மீட்பதற்காக தியத்தலாவ இராணுவ முகாமின் இராணுவத்தினர் அழைக்கப்பட்டதுடன் பாதுகாப்பு கம்பிகளை பயன்படுத்தி மீட்டுப் பணிகள் இடம்பெற்ற வேளையில் காயமடைந்த இரு இராணுவ வீரர்கள் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய பேருந்தில் 38 பேர் பயணித்ததாக கணக்கிடப்பட்டுள்ளதுடன் அவர்களில் 32 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். விபத்தில் இடம்பெற்ற வேளையில் தூக்கியெறியப்பட்டு புதர்களில் சிக்கியுள்ள 6 பேரை தேடும் பணிகள் இன்று (5) இடம்பெறவுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles