ஐந்து மாதங்களாக மர்மம்; குகைக்குள் குழந்தையுடன் மீட்கப்பட்ட 15 வயது சிறுமி! நக்கிள்ஸ் காட்டில் அதிர்ச்சி சம்பவம்

 

ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி ஒருவர், இரண்டு மாதக் குழந்தையுடன் நக்கிள்ஸ் மலைத்தொடரிலுள்ள ஆள் நடமாட்டமற்ற குகையொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உடுதும்பர பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, மீமுரே அருகிலுள்ள வனப்பகுதியில் வைத்து குறித்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சிறுமி காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர். இதையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விசாரணைகளின்போது, இளைஞர் ஒருவர் உள்ளூர் கடையொன்றில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு அரிசி மற்றும் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்து வந்தமை பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, குறித்த இளைஞரைப் பின்தொடர்ந்த பொலிஸார், மக்கள் குடியிருப்புகளிலிருந்து தொலைவிலுள்ள அடர்ந்த வனப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு பிளாஸ்டிக் தாள்களால் மூடப்பட்டிருந்த குகையொன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

குகைக்குள் மேற்கொண்ட சோதனையின்போது, காணாமல் போயிருந்த 15 வயது சிறுமியும் அவரது இரண்டு மாத பெண் குழந்தையும் இருப்பது தெரியவந்துள்ளது.

விசாரணைகளில், மருத்துவ உதவியின்றி குறித்த குகைக்குள்ளேயே சிறுமி குழந்தையைப் பிரசவித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதற்கு கித்துல் தொழிலில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கூர்மையான கருவியொன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தாயும் குழந்தையும் வனப்பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட பாரம்பரிய மூலிகை மருந்துகள் மூலம் பராமரிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குழந்தையின் தந்தை என நம்பப்படும் 23 வயது இளைஞர், கித்துல் பாணி தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பெரிய பாத்திரமொன்றைக் கொண்டு குழந்தையைக் குளிப்பாட்டியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, குறித்த 23 வயது இளைஞரும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் உறவினர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட சிறுமியும் குழந்தையும் பொலிஸ் பாதுகாப்பில் எடுக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுதும்பர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles