கிழக்கு மாகாணத்தில், மாவட்டத்தில் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த இரு மாணவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மாளிகைக்காடு – சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.
இவர்களில் சூர்தீன் முஹம்மட் முன்சிப் (வயது 15) எனும் மாளிகைக்காடு பிரதேசத்தை சேர்ந்த மாணவனின் சடலம் இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து சாய்ந்தமருதைச் சேர்ந்த ரிஸ்வான் முஹம்மட் இல்ஹம் (வயது 15) எனும் மாணவனின் சடலம் இன்று மதியம் மீட்கப்பட்டது.
சாய்ந்தமருதின் பிரபல பாடசாலை மாணவர்களான 13 மற்றும் 15 வயதுக்குட்பட்ட 08 மாணவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை முடித்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர்- ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்றனர்.
அங்கு புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது அன்று மாலை 04.20 மணி அளவில் அதில் இருவரை கடலலையில் அள்ளுண்டு சென்றுவிட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
கடலலையில் அள்ளுண்டு சென்று காணாமல் போன மாணவர்களை மீனவர்களும், பொதுமக்களும் தேடி அலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.ரீ.சபீர் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டார்.
மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர்களான எம்.ஏ. பசீல், ஆர். விமலேந்திரன் தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
