கம்பளை பகுதியில் இரவு நேரங்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கம்பளை குருந்துவத்தைப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றிலும், எக்கால பகுதியில் உள்ள வீடொன்றிலும் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
கம்பளைப் பிரிவின் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பேரில், பிரதான பொலிஸ் பரிசோதகர் குமாரசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர், தெம்பிலிகல மற்றும் மரியாவத்தை பகுதிகளில் உள்ள சந்தேக நபர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் பல்வேறு பொருட்களும் முச்சக்கர வண்டியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி பல இலட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும், திருடப்பட்ட பொருட்களை விற்பனை செய்து கிடைக்கும் பணத்தில் போதைப்பொருள் கொள்வனவு செய்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்கள் இரவு நேரங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் காட்சிகள் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










