கம்பளை முதல் நாவலப்பிட்டி வரையிலான புகையிரத பாதையின் புனரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளன. அதேபோன்று ஹட்டன் முதல் கொட்டகலை, தலவாக்கலை, வட்டகொட, கிரேட் வெஸ்டர்ன் மற்றும் நானுஓயா வரையிலான புகையிரத பாதைகளைச் சீரமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் 27-ஆம் திகதி வீசிய ‘தித்வா’ புயல் காரணமாக, மலையகப் பகுதியில் பல இடங்களில் பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் கொழும்பிலிருந்து பதுளை வரையிலான புகையிரத சேவைகள் முற்றிலும் தடைப்பட்டிருந்தன.
தற்போது பதுளையிலிருந்து நானுஓயா வரை மட்டுமே புகையிரதங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் மாதங்களில் பதுளையிலிருந்து கண்டி வரையிலான புகையிரத சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நானுஓயா புகையிரத சேவைப் பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த பத்து மாதங்களாக மலையகப் பாதையில் புகையிரதப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால், தினசரிப் பயணிகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
புகையிரத மேடைகளை உயர்த்த பயணிகள் கோரிக்கை
இதேவேளை, மலையகப் பகுதியில் உள்ள பெரும்பாலான புகையிரத நிலையங்களில் மேடைகளின் உயரம் குறைவாக உள்ளதால், பயணிகள் புகையிரதப் பெட்டிகளில் ஏறி இறங்குவதில் சிரமப்படுகின்றனர். மேடைகளுக்கும் பெட்டிகளுக்கும் இடையே சுமார் இரண்டு அடி உயரம் இடைவெளி இருப்பதால் பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
குறிப்பாக கொட்டகலை, தலவாக்கலை, வட்டகொட, கிரேட் வெஸ்டர்ன் மற்றும் அதனை அடுத்துள்ள அனைத்து புகையிரத நிலையங்களின் மேடைகளையும் உயர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர்
