கம்பளை, குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறுந்துவத்த – மலங்கமுவ பிரதான வீதியில் பட்டஎல எனும் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரு பெண்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.
வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 40 வயது பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் நேற்று வேனொன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலிருந்து வந்த மற்றுமொரு வேன், வேகக்கட்டுப்பாட்டை இழந்து குறித்த வேனுடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
பின்னர் வேகமாக இழுத்துச்செல்லப்பட்ட வேன், ஊழியர்மீது மோதியுள்ளது. இருவர் தெய்வாதீனமாக உயிர்தப்பினர். வேன் சாரதி படுகாயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றது.
குறுந்துவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கம்பளை நிருபர் – லாவண்யா










